Monday, May 24, 2010

ஸ்ரீ விநாயக வணக்கம்




                            உ                                                                                                                          
                                                                                                     திருவாக்கும்   செய்கருமம்   கைகூட்டும்- செஞ்சொற்
பெருவாக்கும்   பீடும்   பெருக்கும்   உருவாக்கும்
ஆதலாற்  வானோரும்  ஆனைமுகத்தோனை
காதலாற்   கூப்புவார்    தம்கை .                         

ஸ்தோத்திரம்

முஷிக வாகன  மோதக ஹஸ்த    சாமள கர்ண விளம்பித  சூத்திர
வாமன ரூப   மகேஸ்வர  புத்ர    விக்ன வினாயக பாத  நமஸ்தே .

வினாயகர் ஓங்கார சொரூபமானவர். அவருக்கு செய்யும் வணக்கம் பிரம்மத்தையே சேருகிறது. வினாயகரை வணங்குதல் எல்லா தெய்வங்களையும் வணங்கியதற்கு ஒப்பாகும். பிடித்து வைத்தால் பிள்ளையார் என்று ஒரு வழக்கு மொழியும் கிராமப் புறங்களில் உள்ளது. அதாவது மஞ்சள் பொடி, பசும் சாணம் இதர சில பொருட்களினால் பிடித்து வைத்து பிள்ளையாரை ஆவாகணம் செய்து வழிபடலாம். மற்ற எல்லா வழிபாட்டிலும் மிக எளிமையாக வழிபடக் கூடியது வினாயகர் வழிபாடே.


வினாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்                                   வினாயகனே வேட்கை தணிவிப்பான்
வினாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து

வினாயகர் அகவல்                                                                                  ---------------------------------------
சீதக்களபச் செந்தாமரைப் பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகி லாடையும்
வண்ண மருங்கில் வளர்ந்தழ  கெறிப்பப்

பேழை வயிறும் பெரும் பாரக் கோடும்
வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடி கொண்ட நீல மேனியும்

நான்ற வாயும் நாலிறு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும்
திரண்ட முப்புரி நூல் திகழொளி மார்பும்
சொற்பதங் கடந்த துரிய மெய்ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே...!
 முப்பழம் நுகரும் மூசிக வாகன
இப்பொழுதென்னை ஆட்கொள்ள வேண்டித்
தாயாய் எனக்குத் தானெழுந்தருளி
மாயப்பிறவி மயக்கம் அறுத்தே
திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் னுளந் தன்னில் புகுந்து
குருவடிவாகிக் குவலயந்தன்னில்
திருவடி வைத்து திறமிது பொருளென
வாடா வகைதான் வந்தெனுக்  கருளி
கோடாயுதத்தால் கொடு வினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்
தெவிட்டா ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணை   இனிது எனக்கருளிக்
கருவிகள் ஒடுங்கும் கருத்திணை அறிவித்து
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
தலமொரு நான்கும் தந்தெனக்கு அருளி
மலமொரு மூன்றின மயக்கம் அறுத்தே

ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்

ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறுதாரத்  தங்குச நிலையும்
பேறா நிறுத்தி பேச்சுரை அறுத்தே
இடை பிங்கலையின் எழுத்தறிவித்து
கடையில் சுழுமுனை கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவி லுணர்த்திக்

குண்டல யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்தின் மூண்டெழு கனலை
  நாவால்  எழுப்பும் கருத்தறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற் சக்கரத்தின் உறுப்பையும் காட்டி

சண்முக தூலமுஞ்  சதுர்முக சூட்சமும்
எண்முகமாக இனிதெனக்கு அருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்கு
தெரிஎட்டு நிலையும் தெரிசனப் படுத்தி
கருத்தினில் கபால வாயிற்  காட்டி
இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கு அருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து

வாக்கும் மனமும் இல்லா மனோலயந்
தேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி  இரண்டிற்கும்  ஒன்று  இடமென 
அருள் தரும் ஆனந்தத்து அழுத்திஎன் செவியில்
எல்லையில்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள் வழிகாட்டிச் 
                                                                                                 சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

அனுவிற்  கணுவாய்  அப்பாலுக் கப்பாலாய் 
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமு  நீறும் விளங்க நிறுத்திக
                         
கூடும் மெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி  வித்துத்
தத்துவ நிலையை தந்து எனை யாண்ட
வித்தக வினாயக விரை கழல் சரணே...!
                                                                                                                                                                    வினாயகர் அகவல் தோன்றிய கதை:-
                  சமய குரவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் இப்பூவுலகிற்கு வந்த நோக்கம் முடிந்து கயிலாயத்திலிருந்து வந்த வெள்ளை யானையில் ஏறி  கயிலாயம் செல்லலானார். இதனையறிந்த சேரமான் பெருமாள் நாயனார் என்ற சுந்தரரின் உற்ற தோழர் தானும் சுந்தரருடன் கயிலை செல்ல விரும்பி தனது குதிரையில் ஏறி அதன் காதில் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதி சுந்தரரை பின்பற்றி அவருடன் கயிலாயம் செல்லலானார்.

             இவற்றையெல்லாம் தெரிந்து கொண்ட அவ்வையார் தானும் அவர்களுடன் கயிலாயம் செல்ல விரும்பினார். இதற்காக தான் செய்து கொண்டிருந்த வினாயகர் பூசையை அவசர அவசரமாக செய்யலானார். அப்பொழுது வினாயகர் பெருமான் நேரில் தோன்றி “ அவ்வையே ! நீ அவசரப்படாமல் எப்பொழுதும் போல் நிதானமாக உனது பூசைகளைச் செய். அவர்களிற்கு முன்னே உன்னை நான் கயிலாயத்திற்கு கொண்டு சென்று சேர்க்கிறன் ” என்று கூறினார். அவ்வையாரும் நிதானமாக பூசைகளைச் செய்து வினாயகர் அகவலையும் பாடினார். வினாயகரும் தான் கூறியபடி அவ்வையாரை தனது தும்பிக்கையினால் தூக்கி சுந்தரரிற்கும், சேரமானிற்கும் முன்பாக கயிலாயத்தில் சேர்ப்பித்தார்.
                              வினாயகர் அகவல் வினாயகப் பெருமானின் அழகையும் பெருமைகளையும் அற்புதமாக விளக்குவதுடன் யோக முறைகளில் ஒன்றான குண்டலிணி யோகம் பற்றியும் சிறப்பாக விளக்குகிறது.

எல்லாம் வல்ல வினாயகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் சகல வளமும் சகல நலமும் பெறுவோமாக!